ஏழுமலையான் நகர் பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள், இன்று மாநகராட்சி அலுவலகத்தில் ஆணையரை நேரில் சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில், “எங்கள் பகுதி ஊராட்சி ஒன்றியமாக இருந்த காலத்திலிருந்து, நகராட்சியாக மாற்றப்பட்ட பிறகும், தற்போது மாநகராட்சியாக இருந்தும், எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை. குடிநீர், சாலை, தெருவிளக்கு, கழிவுநீர் வடிகால் ஆகியவை இன்றளவும் இல்லை” என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
மேலும், “எங்கள் வீடுகள் அனைத்தும் சட்டபூர்வமான அனுமதியுடன் கட்டப்பட்டவை. வரிகளையும் முறையாக செலுத்தி வருகிறோம். மனைப்பிரிவு அமைப்பின்போது சாலை மற்றும் 21 மின்கம்பங்களுடன் தெருவிளக்குகள் அமைக்கப்பட்டன. ஆனால் அதன் பிறகு எந்த பராமரிப்பும் செய்யப்படவில்லை. தண்ணீர் தொட்டி இருந்தும், அதில் தண்ணீர் இல்லாத நிலை நீடிக்கிறது” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து பலமுறை பஞ்சாயத்து நிர்வாகம், மாநகராட்சி உறுப்பினர், ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் நேரிலும், பதிவுத் தபால் மூலமாகவும் மனுக்கள் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
அப்பகுதி வாசி கங்கையம்மாள் கூறுகையில், “30 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு வசித்து வருகிறோம். அடிப்படை வசதிகள் இல்லாததால் மிகுந்த சிரமம் அனுபவித்து வருகிறோம்.
முன்னாள் மாவட்ட ஆட்சியர் மூர்த்தி ஆய்வு செய்து வசதிகள் செய்ய உத்தரவிட்டும் எந்த முன்னேற்றமும் இல்லை. இனியும் நடவடிக்கை எடுக்காவிட்டால், நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்க மக்கள் முடிவு செய்துள்ளனர்” என்றார். இதனால், ஏழுமலையான் நகர் பகுதியில் தேர்தல் புறக்கணிப்பு சூழல் உருவாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Bala Subramaniam
Thoothukudi district reporter Tamil Nadu
