சாலை விபத்தில் உயிரிழந்த அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவரின் குடும்பத்திற்கு, ஒரு கோடியே 60 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான தொகையை இழப்பீடாக வழங்க திருநெல்வேலி மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
, ஆசிரியை கேத்தரின் கினிதா (43), இவர் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர், பணி மாறுதல் காரணமாக ராமநாதபுரம் மாவட்டம் சிக்கலில் பணியாற்றி வந்தார்.கடந்த செப்டம்பர் 18, 2024 அன்று பிற்பகல் ஒரு மணி அளவில் சிக்கல் கிழக்கு கடற்கரைச் சாலையில் (ECR) தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் வந்த கார் ஒன்று ஆசிரியை மீது பலமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கேத்தரின் கினிதா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து உயிரிழந்த ஆசிரியையின் கணவர் லீவன் கிறிஸ்டோபர், அவர்களது ஒரு வயது மகன் அனாக்ஸ் கிறிஸ்டன் மற்றும் தாய் நகோமி தாம்சன் ஆகியோர் வழக்கறிஞர் A.செல்வராஜ் மூலம் திருநெல்வேலி மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் (சிறப்பு சார்பு நீதிமன்றம்) மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு நீதிபதி கனம் ப்ரெஷ்நேவ் அவர்கள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் A. செல்வராஜ், விபத்து நிகழ்ந்த விதம் மற்றும் காரின் ஓட்டுநரின் அஜாக்கிரதையை ஆதாரங்களுடன் வாதிட்டார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, விபத்து காரின் கவனக்குறைவான ஓட்டுதலால் மட்டுமே ஏற்பட்டது என்பதை உறுதி செய்தார். இதனையடுத்து, பாதிக்கப்பட்ட ஆசிரியையின் குடும்பத்திற்கு ₹1,60,08,486/- இழப்பீடாக வழங்க காப்பீட்டு நிறுவனத்திற்கு அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.
நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு, விபத்தில் ஒரு வயது குழந்தையைத் தவிக்கவிட்டுச் சென்ற ஆசிரியையின் குடும்பத்திற்கு ஒரு சிறிய ஆறுதலாகவும், வாழ்வாதார உறுதியாகவும் அமைந்துள்ளது.
