Ranipet Journalist Farooq Pasha
தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நெமிலியில் தி.மு.கவினர், மசோதாவின் நகலை எரித்து கண்டன முழக்கங்களை எழுப்பி போராட்டம் நடத்தினர்!….*
மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் வீடுகள் மற்றும் பொது இடங்களில் கருப்பு கொடி ஏற்றி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், மத்திய அரசின் தொகுதி மறுசீரமைப்பு மசோதாவின் நகலை எரித்து, கண்டன முழக்கங்கள் எழுப்பி போராட்டம் நடத்தினார்.
நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தில் இன்று தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்கிறது. இந்த மசோதா நிறைவேறினால் தென்னிந்திய மாநிலங்களின் மக்களவை எம்.பி.க்களின் விகிதம் கடுமையாக குறையும், வட மாநிலங்களின் விகிதம் அதிகரிக்கும் என்பது குற்றச்சாட்டு. இதனால் தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இந்த மசோதாவுக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
மேலும் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் பொது இடங்கள் மற்றும் வீடுகளில் இன்று கருப்பு கொடி ஏற்ற முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்திருந்தார். இதனையடுத்து சென்னையில் முதல்வர் ஸ்டாலின் இல்லம், கோபாலபுரத்தில் உள்ள முன்னாள் முதல்வர் கலைஞர் இல்லம், திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயம் மற்றும் திமுக கூட்டணி கட்சிகளின் அலுவலகங்கள், தலைவர்கள் வீடுகள், அமைச்சர்கள் வீடுகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் கருப்பு கொடி ஏற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நெமிலி பேருந்து நிலையத்தில் நெமிலி கிழக்கு ஒன்றிய செயலாளர் வடிவேலு அவர்கள் தலைமையில் திமுகவினர் கருப்பு கொடி ஏந்தி, ஒன்றிய அரசின் தொகுதி மறுசீரமைப்பு மசோதாவின் நகலை எரித்து, ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பி போராட்டம் நடத்தினர்.
இதில் நெமிலி பேரூர் செயலாளர் ஜனார்த்தனன், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் சரவணன், ஒன்றிய துணை செயலாளர் முகம்மது அப்துல் ரகுமான், நிர்வாகிகள் சேகர், சுகுமார், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நியூஸ் நேசன் 81 செய்திகளுக்காக பாரூக் பாஷா
